வரலாற்றுக்குள் முன்சிறை நட்பும் நலனும் நாடும் முன்சிறை தூய ஆரோக்கிய அன்னை இறை சமூகம் புதிதாக உதயமாகி...
வரலாற்றுக்குள் முன்சிறை நட்பும் நலனும் நாடும் முன்சிறை தூய ஆரோக்கிய அன்னை இறை சமூகம் புதிதாக உதயமாகியுள்ள குழித்துறை மறைமாவட்டத்தின் (2014), பாரம்பரியமிக்க வேங்கோடு மறைவட்டத்தின் கீழ் இயங்கும் உயிர்துடிப்புள்ள பங்கு ஆகும். சின்ன வேளாங்கண்ணி என்ற பெயர் பெற்ற பங்கு ஆலய நூற்றாண்டு விழா (2013) கொண்டாடிய இறைமக்கள் அன்னைக்கு மிகப்பெரிய செலவில் புதிய ஆலயம் ஒன்றை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். கோட்டாறு மறைமாவட்டம் (1930) உருவாவதற்கு முன்னரே ஒரு நூற்றாண்டுக்குமேல் புதுக்கடை பங்கின் கிளையாக செயல்பட்ட முன்சிறை சபை 07-10-2000-ல் செபஸ்தியார் புரத்தை கிளையாக் கொண்டு தனிப் பங்காக உதயமாகியது. முதல் பங்கு அருட்பணியாளர் A. ஜோக்கிம் ஆவார்.கொல்லம் மறைமாவட்டம் (1886) உருவாவதற்கு முன்பே மலபார் மறைவட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் காரங்காடு, வேங்கோடு என்ற இரு பணித்தளங்கள் உள்நாட்டு மக்களின் ஆன்மீகத் தேவைகளை கவனித்து வந்தன. கிறிஸ்தவம் உள்நாட்டில் தழைத்து வளர ஆரம்பித்தது. போர்ச்சுகீசிய மறைபணியாளர்கள் வந்து சென்றனர். அப்படி ஒரு மறைப்பணியாளர் இப்பகுதிக்கு வந்து இறைவார்த்தையை போதித்துவிட்டு மரியன்னையின் சுரூபம் ஒன்றையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். மக்கள் மரியன்னை சுரூபத்தின் முன் கூடி தினமும் ஜெபித்து வந்தனர். இவர்கள் தான் முன்சிறை பங்கின் முதல் கிறிஸ்தவர்களாக கருதப்படுகின்றனர். புதுக்கடையில் கழுநெட்டான் விளையில் ஓலையால் வேயப்பட்ட ஆலயம் ஒன்றைக் கட்டி வழிபட்டு வந்தனர். அர்ச். தேவமாதா தேவாலயம் என்று அது அழைக்கப்பட்டது. வேங்கோடு பங்கிலிருந்து புதுக்கடை ஆரோபண அன்னை ஆலயம் (29-03-1911) தனிப்பங்காக பிரிந்தபோது முன்சிறை அதன் கிளையாக செயல்பட துவங்கியது. புதுக்கடை என்னும் ஊரிலேயே இரண்டு ஆலயங்களும் அமைந்துவிட்டதால் பிரித்துக் காட்டுவதற்காக இது முன்சிறை கிளை சபை என்று அழைக்கப்பட்டது.